18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை


18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 May 2022 11:20 PM IST (Updated: 10 May 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளம்வயது திருமணம்
குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, 18 வயது நிறைவடையாத சிறுமிக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். இதை மீறி இளம்வயது திருமணம் புரியும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் இளம்வயது திருமணத்துக்கு உடந்தையாக இருப்போருக்கும், திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் இந்த சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் திருமணம் என்ற பெயரில் 18 வயது நிறைவடையாத சிறுமியுடன் உறவு வைத்து கொண்டால், கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
உயிரிழப்பு அபாயம்
18 வயது நிறைவடையாத சிறுமி கருவுறும் போது, அந்த சிறுமியின் கர்ப்பப்பை மற்றும் உறுப்புகள் சரிவர வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் கருச்சிதைவு, மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாகவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் பிரசவிக்கும் சிறுமிக்கும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்றாலோ, நடைபெற போவதாக அறிந்தாலோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 04286-233103 என்கிற எண்ணில் அல்லது சைல்டு லைன் அமைப்பின் இலவச தொலைபேசி எண் 1098-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story