மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடக்கம்: 19,154 மாணவ, மாணவிகள் எழுதினர்-798 பேர் தேர்வுக்கு வரவில்லை


மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடக்கம்: 19,154 மாணவ, மாணவிகள் எழுதினர்-798 பேர் தேர்வுக்கு வரவில்லை
x
தினத்தந்தி 10 May 2022 11:21 PM IST (Updated: 10 May 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-1 தமிழ் தேர்வை 19,154 மாணவ, மாணவிகள் எழுதினர். 798 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நாமக்கல்:
பிளஸ்-1 தேர்வு தொடக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 988 மாணவர்கள், 9 ஆயிரத்து 853 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 82 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்தி, பிரெஞ்சு
முதல் நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வை 19 ஆயிரத்து 838 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். இவர்களில் 19 ஆயிரத்து 57 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 781 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களை பொறுத்த வரையில் தமிழ் தேர்விற்கு 119 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 97 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 22 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மொத்தமாக தமிழ் தேர்வை 19 ஆயிரத்து 154 பேர் எழுதினர். இதேபோல் 781 மாணவ, மாணவிகள், 22 தனித்தேர்வர்கள் என மொத்தம் 803 பேர் தேர்வு எழுதவில்லை. இந்தி, பிரெஞ்சு போன்ற தேர்வுகளை 13 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
இந்த தேர்வு பணியில் 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 120 நிரந்தர பறக்கும் படையினர், 1,201 அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1,500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி, தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வையொட்டி அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story