தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்1 பொதுத்தேர்வு தொடங்கியது மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர்


தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்1 பொதுத்தேர்வு தொடங்கியது மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 11:22 PM IST (Updated: 10 May 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் 20 ஆயிரத்து 698 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் 20 ஆயிரத்து 698 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிளஸ்-1 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு திட்டமிட்டபடி பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 
மாவட்டம் முழுவதும் உள்ள 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 11,489 மாணவர்களும், 11,390 மாணவிகளும் என மொத்தம் 22,879 பேர் பிளஸ்-1 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 79 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்ற நிலையில் மொத்தம் 20,698 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். 2,181 பேர் தேர்வு எழுத வரவில்லை.
துணை இயக்குனர் ஆய்வு
இந்த தேர்வையொட்டி மொத்தம் 79 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், 1,280 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 22 வழித்தட அலுவலர்களும், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உதவியாக 120 சொல்வதை எழுதுபவர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 11-வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல் (தர்மபுரி), பாலசுப்ரமணியம் (பாலக்கோடு), ரவி (அரூர்) ஆகியோரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story