ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 10 May 2022 11:34 PM IST (Updated: 10 May 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

குடவாசல்;
குடவாசல் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வீடு கட்டும் திட்டம் 
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள விக்கிரபாண்டியம் ஊராட்சி அருவீழிமங்கலத்தை சேர்ந்தவர் குமார்(வயது 48). இவர்,  விக்கிரபாண்டியம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஊராட்சியில் இந்த ஆண்டு 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. 
இதன்படி விக்கிரபாண்டியம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த குமார் மனைவி ஜேஸ்லிமேரி என்பவர் பெயரில் வீடுகட்டுவதற்கான பணி ஆணை ஊராட்சி செயலாளர் குமாரிடம் இருந்தது. 
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
இந்த நிலையில் ஜேஸ்லிமேரியின் கணவர் குமார், விக்கிரபாண்டியம் ஊராட்சி செயலாளர் குமாரை அனுகி வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்குமாறு கேட்டார். அப்போது பணி ஆணையை வழங்க ஊராட்சி செயலாளர் குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜேஸ்லிமேரியின் கணவர் குமார் இது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். 
இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை பயனாளியின் கணவர் குமாரிடம் கொடுத்து அந்த பணத்தை ஊராட்சி செயலாளர் குமாரிடம் கொடுக்குமாறு கூறினர். 
கைது
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் குமார் நேற்று காலை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஊராட்சி செயலாளர் குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை பயனாளி ஜேஸ்லிமேரியின் கணவர் குமார் வழங்கினார். 
பணத்தை ஊராட்சி செயலாளர் குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, சித்ரா ஆகியோர் ஊராட்சி செயலாளர் குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story