சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா


சுசீந்திரம்  தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 10 May 2022 11:41 PM IST (Updated: 10 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம், 
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்பத்திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரைத் தெப்பத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. 
திருவிழாவின் இறுதி நாளான நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மேல் தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலிக்கும் வகையில் கோலாகலமாக இருந்தது. தெப்பக் குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாய் காணப்பட்டது. 
தட்டு வாகனங்கள்
இரவு 7.50 மணிக்கு கோவிலில் இருந்து இரு தட்டு வாகனங்களில் சாமி அம்பாள் மற்றும் பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் எழுந்தருளி கோவிலின் அருகில் உள்ள தெப்பக் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் 8.10 மணிக்கு தெப்பம் முதல் சுற்று ஓடத்தொடங்கியது. தெப்பம் 3 முறை உலா வந்தது. 
தெப்பம் உலா வரும்போது மரபுப்படி தெப்பத்தை வடம்பிடித்து இழுப்பது வழக்கம். அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்தபோது வாணவேடிக்கை நடத்தப்பட்டது. 
கலந்து கொண்டவர்கள்
தெப்பத்திருவிழா நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர்கள் சிவக்குமார், ஆனந்த், முன்னாள் கண்காணிப்பாளர் சோனாச்சலம், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருவாவடுதுறை ஆதின ஆய்வர் வீரநாதன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், இரவிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி தேவி பெருமாள், தேரூர் பேரூராட்சி தலைவி அமுதா ராணி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவள்ளி, வள்ளியம்மாள், வீரபத்திர பிள்ளை, சுசீந்திரம் பா.ஜனதா பிரமுகர் ரவீந்திரன், ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரர் மோகன்தாஸ், சுசீந்திரம் கோவில் குத்தகைதாரர் மூர்த்தி, குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், செயல் அலுவலர் கமலேஸ்வரி, வட்டபள்ளிமடம் ஸ்தாணிகர் சர்மா, சிவபிரசாத், தெற்குமண்மடம் நம்பூதிரி திலீபன், ஆதிசேஷ், தேவசம்பொறியாளர் ராஜ்குமார், சுசீந்திரம் தெய்வீக, இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பக்த சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். 
ஆராட்டு
தெப்பத்திருவிழா முடிந்த பின்பு சாமி அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவில் ஆராட்டு விழா நடந்தது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story