மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் 50 கிராமங்களில் மின்தடை


மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் 50 கிராமங்களில் மின்தடை
x
தினத்தந்தி 10 May 2022 11:46 PM IST (Updated: 10 May 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் பள்ளி மேற்கூரையும் உடைந்து சேதமானது.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்தசூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெள்ளிமலை, கரியாலூர், கொட்டபுத்தூர், மேல்பாச்சேரி, பொட்டியம், மாயம்பாடி, சின்னதிருப்பதி உள்பட பல்வேறு கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மாயம்பாடி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சிமெண்டால் ஆன மேற்கூரைகள் சூறைக்காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உடைந்து  சேதமடைந்தன. மேலும் 50 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

சீராக 2 நாட்கள் ஆகும் 

இது பற்றி அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் நேற்று காலையில் கல்வராயன்மலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை மீண்டும் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை பகுதி என்பதால் மின்கம்பங்களை முழுமையாக சீரமைக்க 2 நாட்கள் ஆகும் என்றும், மின்வினியோகமும் பாதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மரங்கள் சாய்ந்தன 

மூங்கில்துறைப்பட்டு பாக்கம் ஏரிக்கரை அருகே கள்ளக்குறிச்சி -திருவண்ணாமலை பிரதான சாலையில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். இது தவிர சூறைக்காற்றில் வடகீரனூரில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அந்த மின்கம்பங்களை  மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்து மீண்டும் மின்வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர். இது தவிர பல்வேறு இடங்களில் காற்றால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

சங்கராபுரம்

 சங்கராபுரம் அருகே பொய்க்குணத்தை சேர்ந்த ராஜாங்கம் மனைவி உத்திராம்பாள் என்பவருடைய வீட்டின் சிமெண்டால் ஆன மேற்கூரை சூறைக்காற்றில் பறந்து சென்றது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அவைகளை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story