படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 May 2022 11:51 PM IST (Updated: 10 May 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.4.2022 -ந் தேதி முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 31.3.2022 -ந் தேதி அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2022 ந் தேதி அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாதந்தோறும் பத்தாம் வகுப்பு தோல்வியுற்றவர்களுக்கு ரூ.200,  தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு  ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வீதம் வழங்கப்படுகிறது. எனவே உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களில் இலவசமாகவோ அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து 31.05.2022-ந் தேதி வரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story