கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே முடியனூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இருதரப்பினர்களுக்கு இடையே உள்ள பிரச்சினை காரணமாக சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதி கோவிலில் திருவிழாவை நடத்த வரஞ்சரம் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து திருவிழா நடத்துவது தொடர்பாக கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இதற்கு தாசில்தார் விஜய்பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் திருவிழாவை அனுமதியின்றி நடத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் முடியனூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கள்ளக்குறிச்சி தாலுகாஅலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் தாசில்தார் விஜய்பிரபாகரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story