நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன்


நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன்
x
தினத்தந்தி 10 May 2022 6:40 PM GMT (Updated: 2022-05-11T00:10:46+05:30)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ஆய்வுக்குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்ட ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். 

அவர் பேசியதாவது:-

பாசன வசதி ஏற்படுத்த மானியம்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், விவசாயத்தை மேம்படுத்த நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திட ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை பொருத்துவதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் 2007-2008-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையாக 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை அரசால் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

300 பேருக்கு ஒப்புதல்

கூட்டத்தில் விவசாயிகளின் 482 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வங்கிகள் தெரிவித்த 300 மனுக்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள 182 மனுக்களை விரைந்து பரிசீலனை செய்யவும், வட்டார அளவில் வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் குழு கூட்டம் நடத்தி விரைந்து கடன் வழங்க வங்கிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகர் மற்றும் வேளாண்மை துறை, வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story