குளித்தலை அரசு பள்ளியில் இடவசதி இல்லாததால் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலம்
குளித்தலை அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குளித்தலை,
நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு பள்ளி
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. நடப்பாண்டு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி முறைப்படி இப்பள்ளியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதுபோல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக இப்பள்ளியில் பல்வேறு வகையான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் நடனம் போன்றவை கற்றுத்தரப்படுகிறது.
அடிப்படை வசதிகள் இல்லை
இதனால் நகர பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். மேலும், கிராமப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்காக வேன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்களது குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க பல பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திறந்த வெளி மற்றும் பள்ளி வராண்டா பகுதியில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலம்
இந்த சூழ்நிலையில் இந்த பள்ளியில் இருந்த கட்டிடம் ஒன்று பழுதடைந்த காரணத்தால் பல மாதங்களுக்கு முன்பு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது வெயில் காலமாக இருப்பதால் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் இடங்களில் அமர்ந்து படித்து வருகின்றன. ஆனால் மழை பெய்யும் நேரங்களில் மழைக்கு ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாத சூழ்நிலை உள்ளது.
போதிய வகுப்பறைகள் இல்லாததால் அனைத்து மாணவ-மாணவிகளையும் அமர வைக்க இடமில்லாமல் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் சில வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் இடவசதி இல்லாத காரணத்தினால் இப்பள்ளியில் நடைபெறும் முழு ஆண்டுத்தேர்வு கூட தனியார் திருமண மண்டபத்தில் நடத்தக்கூடிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்
அரசு பள்ளி தங்கள் ஊரில் இருந்தாலும் தனியார் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பல பெற்றோர்கள் விரும்புகின்றனர். அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் இந்த காலகட்டத்தில், தனியார் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை குளித்தலையில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதியை ஏற்படுத்தவும், போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவுந்தரவள்ளி கூறியதாவது:-
ஏழை, எளிய மக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா, நோட்டு புத்தகம், காலணி, சீருடை, சத்துணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தநிலையில், தனியார் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை ஒரு அரசுப்பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவது இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக போதிய இடவசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
பல மாதங்களுக்கு முன்பு இங்குள்ள பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் கட்ட இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அருகே உள்ள திருமண மண்டபத்தின் ஒருபகுதியை வாடகைக்கு எடுத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது மாணவ-மாணவிகள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் முழு ஆண்டுத்தேர்வு எழுதும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், கூடுதல் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story