13,864 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13,864 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13,864 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13,864 பேர் எழுதினர்
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 மையங்களில் 120 பள்ளிகளை சேர்ந்த 14,320 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். முதல்நாளான நேற்று 456 பேர் தேர்வு எழுத வரவில்லை. 13,864 பேர் தேர்வு எழுதினர்.
ராணிப்பேட்டை எல்.எப்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
போலீஸ் பாதுகாப்பு
பிளஸ்-1 பொதுத் தேர்வு கண்காணிப்புப் பணிக்காக 84 நிலையான படை உறுப்பினர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இது தவிர கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொது தேர்வினை கண்காணித்து வருகின்றனர்.
வினாத்தாள்கள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுகிறது. 1,480 ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும், 32 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாகவும், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 82 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story