பிளஸ்-1 தமிழ் தேர்வு எதிர்பார்த்ததைவிட எளிதாக இருந்தது-மாணவ-மாணவிகள் பேட்டி
பிளஸ்-1 தமிழ் தேர்வு எதிர்பார்த்ததைவிட எளிதாக இருந்தது-மாணவ-மாணவிகள் பேட்டி
ராமேசுவரம்
எதிர்பார்த்ததைவிட தமிழ் தேர்வு மிக எளிதாக இருந்ததாக முதல் முறையாக அரசு பொதுத்தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவ-மாணவிகள் கூறினர்.
பிளஸ்-1 தேர்வு
தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பிளஸ்-1 தேர்வு தொடங்கிய நிலையில் முதல் நாள் தேர்வு எழுதி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கருத்துக்களை பார்ப்போம்.
ராமேசுவரம் லெட்சுமண தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ரோஷ்னிப்ரியங்கா: கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 10-வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவில்லை .அரசு ஆல்பாஸ் என அறிவித்து விட்டதால் நேரடியாக 11-வது வகுப்பு வந்துவிட்டோம். முதல் முறையாக இந்த ஆண்டு தான் அரசு பொதுத்தேர்வு எழுதியுள்ளோம். எதிர்பார்த்ததைவிட தமிழ் தேர்வு சுலபமாக இருந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். கடந்த சில மாதங்களாகவே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொது தேர்வு எழுதுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
எளிதாக இருந்தது
ராமேசுவரம் ஸ்ரீராம் நகர் பவித்ரா: தேர்வு எழுத செல்வதற்கு முன்பு வரையிலும் தேர்வு குறித்த பயம் மனதில் அதிகமாக இருந்தது. ஆனால் தேர்வு அறைக்கு சென்ற பின்னர் வினாத்தாளை வாங்கி பார்த்த பின்னர் நாங்கள் படித்த கேள்விகளே அதிகமாக வந்திருந்தன. எதிர்பார்த்ததைவிட தமிழ் தேர்வு எளிதாகவே இருந்தது.
பரமக்குடி மாணவி தர்ஷினி: 2ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக அரசு தேர்வு எழுதுவது என்பது முதலில் பதற்றமாக இருந்தது. தேர்வறைக்கு சென்ற பின்பு வினாத்தாள்களை பார்த்ததும் கேள்விகள் அனைத்தும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தது. அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றுவிட்டோம். தற்போது தேர்வு எழுதுவது என்பது மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அதிக மதிப்பெண்
திருவாடானை மாணவர் சந்தோஷ்குமார்: நான் முதல் முறையாக அரசு பொதுத் தேர்வை எழுத சென்றேன். மிகவும் பதற்றமாக இருந்தது. நான் தேர்வு அறைக்கு செல்லும் வரையில் பதற்றத்துடன் இருந்து வந்தேன். ஆனால் வினாத்தாளை கொடுத்த போது தான் கேள்விகள் சுலபமாக இருப்பது தெரிந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் ஒரு சில கேள்விகள் திருப்புதல் தேர்வில் இருந்து கேட்கப்பட்டது. நெடு வினாக்களும் எளிமையாக இருந்தது. தமிழ் பரீட்சையை போல் எல்லா தேர்வும் எளிமையாக இருக்கும் சுலபமான கேள்விகளாக இருக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story