வீடு புகுந்து 35 பவுன் நகைகள் திருட்டு


வீடு புகுந்து 35 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 10 May 2022 7:28 PM GMT (Updated: 2022-05-11T00:58:51+05:30)

துறையூர் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துறையூர், மே.11-
துறையூர் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலம் போலீஸ் சரகம் அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இந்த தம்பதியின் மகன் கோபி.
இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கோபியின் தந்தை சிவலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் அபினிமங்கலத்தில் ஜெயராணியும், கோபியின் மனைவி அன்னபூரணியும் வசித்து வருகின்றனர்.
35 பவுன் நகைகள் திருட்டு
இந்த நிலையில் அன்னபூரணி வெளியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜெயராணி நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அங்கேயே மறைவான இடத்தில் சாவியை வைத்துவிட்டு தபால் நிலையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றார்.
பின்னர் மாலை 5 மணி அளவில் ஜெயராணி வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த  35 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டு இருந்தன.
வலைவீச்சு
இதுகுறித்து ஜெயராணி புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெயராணி வீட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்தபோது, யாரோ மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டுள்ளனர். அவர் வெளியே சென்றதும் சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story