வளர்ப்பு மகள் உள்ளிட்ட 3 பேர் கைது


வளர்ப்பு மகள் உள்ளிட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 1:23 AM IST (Updated: 11 May 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரை கொன்ற வழக்கில் வளர்ப்பு மகள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
மதுரையில் சொத்துக்காக தொழில் அதிபரை கொன்ற வழக்கில் கணவருடன் வளர்ப்பு மகள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள், பணம் ஆகியவற்றை மீட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.
தொழில் அதிபர்
மதுரை தல்லாகுளம் சின்னசொக்கிகுளம் கமலா 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராம் (வயது 74) தொழில் அதிபர். இவரது மனைவி பங்கஜவள்ளி (73). இவர்கள் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கொடைக்கானலில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நிவேதா என்று பெயரிட்டு வளர்த்தனர். இந்த நிலையில் நிவேதா(19), ஓட்டலில் வேலை பார்த்த காரைக்குடி மானகிரியை சேர்ந்த ஹரிகரன் (22) என்பவரை காதலித்தார். அதற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று அவரை நிவேதா திருமணம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணராம் அவரை வீட்டிற்குள் சேர்க்கவில்லை. எனவே நிவேதா காரைக்குடியில் கணவருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் நிவேதா கர்ப்பமாக இருப்பதால் நடந்தவற்றை மறந்து மகளையும், மருமகனையும் வீட்டில் சேர்த்து கொண்டார். மேலும் அவர்களுக்கு ஜூஸ் கடையும் வைத்து கொடுத்தார்.
கத்தியால் குத்தி கொலை
ஆனால் நிவேதா கணவருடன் சேர்ந்து கொண்டு கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை கிருஷ்ணராம் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த நிவேதா வளர்ப்பு தந்தையை தாக்கியுள்ளார். எனவே ஆத்திரத்தில் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு வீட்டில் கிருஷ்ணராம் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், அதிகுந்தகண்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது நிவேதா மற்றும் ஒருவர் வீட்டிற்குள் சென்று வருவதை கண்டுபிடித்தனர். உடனே காரைக்குடியில் தங்கியிருந்த நிவேதா மற்றும் அவரது கணவர் ஹரிகரனை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
சொத்துக்காக
அப்போது போலீசாரிடம் நிவேதா கூறியதாவது:- சம்பவத்தன்று தன்னையும் தனது கணவரையும் கிருஷ்ணராம் கண்டித்ததால் அவரை தாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன்பின்னர் அவருக்கு போன் செய்த போது தான் செய்த தவறை மன்னிக்குமாறு கூறினேன். ஆனால் அவர் தன்னை பார்க்க வரவேண்டாம் என்றும் சொத்தை முழுவதும் டிரஸ்ட் ஆரம்பித்து அதற்கு எழுதி வைப்பதாகவும் தெரிவித்தார்.
கிருஷ்ணராம் உயிரோடு இருந்தால் சொத்து தனக்கு கிடைக்காது என்பதால் அவரை கொலை செய்ய நான், ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரான சிவகங்கையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று இரவு நானும், சுரேசும் வீட்டிற்கு சென்று கிருஷ்ணராமிடம் பணம் குறித்து பேசினோம். ஆனால் அவர் அதற்கு உடன்படாமல் சத்தம் போட முயன்றதால் கத்தியால் கொலை செய்து விட்டு அங்கிருந்த 23 பவுன் தங்க நகைகள், 71 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு தப்பி விட்டோம் என்று தெரிவித்தார்.
கணவருடன் வளர்ப்பு மகள் கைது
அதை தொடர்ந்து போலீசார் சிவகங்கையில் மறைந்திருந்த சுரேசையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
மேலும் கமிஷனர் கூறும் போது, ஒரு சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் கண்காணிப்பு கேமரா தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதன் முக்கியத்துவம் கருதி நகரில் 12,500 கேமராக்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கோரிப்பாளையம் சிக்னல் பகுதியில் மட்டும் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், கடைக்காரர்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க முன்வரவேண்டும் என்றார்.

Related Tags :
Next Story