அய்யனார் கோவில் தேரோட்டம்


அய்யனார் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 8:02 PM GMT (Updated: 10 May 2022 8:02 PM GMT)

அய்யனார் கோவில் தேரோட்டம் நடந்தது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனார், பூரணி, புஸ்கலாம்பிகை, கருப்பையா, மாரியம்மன், முருகன், செல்லியம்மன், விநாயகர், செம்மலையப்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மேலும் சுவாமி திருவீதி உலா கரகாட்டத்துடன் நடைபெற்றது. நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு போட்டும் வழிபாடு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை சுவாமிகளுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உள்பட 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 7 சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேள, தாளங்கள் முழங்க சுவாமிகளை 3 திருத்தேர்களில் எழுந்தருள செய்தனர். பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் பக்தி பாடல்களை பாடியபடி செல்ல, தேனூர் கிராமத்தில் தேரோடும் வீதிகள் வழியாக அய்யனார், கருப்பையா, முருகன் ஆகிய சுவாமிகளின் தேர் வரிசையாக உலா வந்தது. ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் கூடி நின்று சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் துங்கபுரம் தேனூர், வேப்பூர், புதுவேட்டக்குடி, காடூர் கீழப்பெரம்பலூர், வயலூர், வயழப்பாடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story