தஞ்சை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தஞ்சாவூர்
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தியது. குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்று தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் பழங்கள், இளநீர், நுங்கு, குளிர்பானம் போன்றவற்றை வாங்கி பருகி வந்தனர்.
பலத்த காற்றுடன் மழை
இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் வெயில் கொளுத்தியது. இரவு நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, குருங்குளம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் 36 மி.மீ. மழை பதிவானது.
கோடை நெல் சாகுபடி
இந்த மழை காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் குறுவைக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை அளவு விவரம்
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
பூதலூர்-36, திருக்காட்டுப்பள்ளி-21, வெட்டிக்காடு-21, கல்லணை-19, திருவையாறு-19, அய்யம்பேட்டை-16, கும்பகோணம்-5, தஞ்சை-4, மஞ்சளாறு-4, ஒரத்தநாடு-3, பாபநாசம்-2, அணைக்கரை-2, மதுக்கூர்-1, பட்டுக்கோட்டை-1.
Related Tags :
Next Story