தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்து நாயை கடித்து குதறிய சிறுத்தை; விவசாயி கூச்சல் போட்டதால் கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியது


தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்து நாயை கடித்து குதறிய சிறுத்தை; விவசாயி கூச்சல் போட்டதால் கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியது
x
தினத்தந்தி 10 May 2022 8:36 PM GMT (Updated: 10 May 2022 8:36 PM GMT)

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்து நாயை சிறுத்தை கடித்து குதறியது. இதை கண்டதும் விவசாயி கூச்சல் போட்டதால் சிறுத்தை தப்பி ஓடி கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி கொண்டது.

தாளவாடி
தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்து நாயை சிறுத்தை கடித்து குதறியது. இதை கண்டதும் விவசாயி கூச்சல் போட்டதால் சிறுத்தை தப்பி ஓடி கரும்பு தோட்டத்துக்குள்  பதுங்கி கொண்டது. 
நாயை கடித்து குதறிய சிறுத்தை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. 
இந்தநிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அருகே உள்ள சேசன் நகர் பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அந்த சிறுத்தை அந்த பகுதியை சேர்ந்த விவசாயியான காளியப்பன் (வயது 55) என்பவரின் வீட்டுக்கு சென்றது. அப்போது அங்கு இருந்த நாயை பாய்ந்து சென்று கடித்து குதறியது. 
கரும்பு தோட்டத்துக்குள்..
இதனால் நாய் சத்தம் போட்டு கத்தியது. சத்தம் கேட்டதும் வீட்டின் உள்ளே இருந்து காளியப்பன் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவருடைய நாயை சிறுத்தை கடித்துக் கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். 
எனினும் அவர் சுதாரித்துக்கொண்டு சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டதும், சிறுத்தையை கடித்த நாயானது, அங்கிருந்து தப்பி அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து பதுங்கி கொண்டது.
பொதுமக்கள் பீதி
இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால்தடம் என தெரிய வந்தது. பகல் நேரத்திலேயே கிராமத்துக்குள் புகுந்து வீட்டில் இருந்த நாயை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 
கடந்த மாதம் இதே கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று நாய் மற்றும் 2 கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாய் மற்றும் கன்றுக்குட்டிகளை அடித்து கொன்று வரும் சிறுத்தையை  வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story