வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு- தலைமை காவலர் பணிஇடை நீக்கம்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு- தலைமை காவலர் பணிஇடை நீக்கம்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 10 May 2022 8:41 PM GMT (Updated: 10 May 2022 8:41 PM GMT)

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட தலைமை காவலரை பணிஇடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

நம்பியூர்
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட தலைமை காவலரை பணிஇடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.  
தலைமை காவலர்
நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன் (வயது 42) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அயலூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளனர். இந்த இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திர பதிவு செய்தாக கூறப்படுகிறது. இதுபற்றி கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர். 
பெண் போலீசாரிடம் தகராறு
இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை அதிகாரியாக நியமிக்கபட்டார். இதையடுத்து கடந்த மாதம் 21-ந் தேதி நம்பியூர் போலீஸ் நிலையத்தில் வைரநாதனை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தினார். அப்போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இன்ஸ்பெக்டர் நிர்மலாவை தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பணி இடைநீக்கம்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ‘தலைமை காவலர் வைரநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை,’ என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 
இதைத்தொடர்ந்து தலைமை காவலர் வைரநாதனை பணிஇடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

Next Story