தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மூத்த மகனும் சாவு


தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மூத்த மகனும் சாவு
x
தினத்தந்தி 11 May 2022 2:13 AM IST (Updated: 11 May 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மூத்த மகனும் உயிரிழந்தான்.

திருக்காட்டுப்பள்ளி
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா(30). இவர்களது மகன்கள் முகேஷ்(7), நிதிஷ்(5).விஜயகுமார் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சத்யா தனது 2 மகன்களை வளர்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் அவர் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தார்
இதன்படி கடந்த 6-ந் தேதி சத்யா தனது வீட்டில் இருந்த விஷத்தை  குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தில் கலந்து தனது மகன்கள் முகேஷ், நிதிஷ் ஆகியோருக்கு கொடுத்தார். பின்னர் அவர் மீதி இருந்த விஷம் கலந்த மருந்தை தானும் குடித்தார். 
அப்போது அங்கு வந்த அவரது உறவினர் ஒருவர் மருந்தை தட்டிவிட்டு சத்யா மற்றும் அவரது மகன்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்கள் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
மூத்த மகனும் சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் நிதிஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். முகேஷ் மற்றும் அவனது தாய் சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அதிகாலை சிறுவன் முகேஷ்சும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு பெண் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் வெண்டயம்பட்டி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story