‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 May 2022 8:51 PM GMT (Updated: 10 May 2022 8:51 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குழாய் அருகில் வடிகால்
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது தர்மாபுரி. இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கடை வடிகால் கட்டப்பட்டது. இது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழாயையொட்டி சாக்கடை வடிகால் செல்வதால் கழிவுநீருடன் குடிநீர் கலந்து விடுகிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கவும் சிரமப்பட்டு் வருகிறார்கள். உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தர்மாபுரி.

கோவில் வீதியில் குப்பை
கோபி  ஈஸ்வரன் கோவில் வீதியில் குப்பைகள் 2 இடங்களில் அதிக அளவில் தேங்கியுள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால்  தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கோவில் வீதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
நாதன், கோபி.

அடிக்கடி மின்தடை
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், ராமபயலூர், பீக்கிரிபாளையம், குளத்து பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் முன்னறிவிப்பு எதுவும் இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில நேரங்களில் இரவு முழுவதும் மின் தடை நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பிரச்சினை தீர உடனே முடிவெடுக்க வேண்டும்.
டி.சசிகுமார், சிக்கரசம்பாளையம்.

மாலையில் ஆற்றுநீர் வினியோகம்
பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்காடையம்பட்டியில் காலை 6 மணியிலிருந்து 8.30 மணி வரை ஆற்று தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாலையில் ஆற்று தண்ணீர் வினியோகிப்பதில்லை. மாலை நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீர் வினியோகித்தால் இப்பகுதி பொதுமக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி.

ஆபத்தான குடிநீர் தொட்டி
அந்தியூரை அடுத்த அத்தாணி காலனி அரசு தொடக்கப்பள்ளி அருகில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மேல் பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் குடிநீர் தொட்டி உடைந்து கீழே விழ வாய்ப்பு உள்ளது. அப்போது பேராபத்து நிகழக்கூடும். அதற்கு முன்பு குடிநீர் தொட்டி பழுதை சரிசெய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பொதுமக்கள், அத்தாணி காலனி.

தெருநாய்கள் தொல்லை
பெருந்துறையை அடுத்த சிலேட்டர் நகர் அருகே உள்ள தமிழ் நகரில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் துரத்துகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் தங்களுடைய வாகனங்களை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நா.இளங்கோ ராஜா, தமிழ் நகர். 

Next Story