ஆத்தூரில் சாலை பணிக்கு ரூ.78½ லட்சம் பேரம் பேசிய விவகாரம்: நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கைதானவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்


ஆத்தூரில் சாலை பணிக்கு ரூ.78½ லட்சம் பேரம் பேசிய விவகாரம்: நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கைதானவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 10 May 2022 9:03 PM GMT (Updated: 2022-05-11T02:33:01+05:30)

ஆத்தூரில் சாலை பணிக்கு ரூ.78½ லட்சம் பேரம் பேசிய விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கைதான அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆத்தூர்,
சிறையில் அடைப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளரான சந்திரசேகரன் என்பவர், காண்டிராக்டர் ஒருவரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கியதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.3½ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அவர் கொடுத்த தகவலின் பேரில், சேலம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திலும், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் கைதான சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பரபரப்பு தகவல்கள்
மேலும் கைதான சந்திரசேகரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெடாவூர் முதல் தம்மம்பட்டி வரையில் 6.6 கிலோ மீட்டர் சாலையை ரூ.6 கோடியே 93 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் அகலப்படுத்தி இருவழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதனுடன் சேர்த்து மொத்தம் 9 பணிகளுக்காக சேலம் வட்ட நெடுஞ்சாலையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் மூலம் கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டர் தலைவாசல் அருகே வீரகனூர் தெற்குமேடு பகுதியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் சுந்தரராஜ் (வயது 60) என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கான ஒப்பந்தம் போடுவதற்காக ஆத்தூர் ராணிபேட்டையில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு கடந்த வாரம் சுந்தரராஜ் சென்றுள்ளார்.
உதவி கோட்ட பொறியாளர் கைது
அங்கு இருந்த உதவி கோட்ட பொறியாளரான சந்திரசேகரன் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), சுந்தரராஜிடம் சாலை பணிக்கு எந்தவித பிரச்சினையும் இன்றி பணம் ஒதுக்கீடு செய்வதற்கு ரூ.78 லட்சத்து 53 ஆயிரம் கண்காணிப்பு பொறியாளருக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும். இதில் முன்பணமாக திட்ட மதிப்பீட்டில் 0.50 சதவீதமான ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜ் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரசேகரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.
உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு
போலீசாரின் விசாரணையில் முதலில் சந்திரசேகரன் பதில் ஏதும் பேசாமல் மவுனமாக இருந்ததாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து பேச தொடங்கியதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது, காண்டிராக்டர்களிடம் லஞ்ச பணத்தை மொத்தமாக பேசி அதனை வாங்கி உயர் அதிகாரிகள் கொடுப்பதாகவும், அதனை உயர் அதிகாரிகள் பங்கிட்டு கொள்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மேலும் லஞ்ச பணத்தில் குறைவாக நான் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை உயர் அதிகாரிகளிடம் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவல் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தாலும், இவர்கள் எப்போது சிக்குவார்கள் என போலீசார் காத்திருந்ததாக தெரிகிறது. அப்போதுதான் காண்டிராக்டர் சுந்தரராஜ் புகார் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகி உள்ளார். அவர் மூலம் சந்திரசேகரனை பொறி வைத்து போலீசார் பிடித்துள்ளனர். 
விசாரணை தீவிரம்
சந்திரசேகரன் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை பெற்ற லஞ்ச பணம் யார்? யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். மேலும் விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த லஞ்ச விவகாரத்தில் சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 
இதற்கிடையே சேலம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு வெளியே ஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூ.81 ஆயிரத்தை வீசியது யார்? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிப்பது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுதொடர்பாக போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி விசாரணை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story