தினத்தந்தி’ புகார் பெட்டி


தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 May 2022 2:33 AM IST (Updated: 11 May 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா? 
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் படித்துறை பணிகளுக்காக ஆள் உயரத்துக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. படித்துறையில் நடுவில் உள்ள ஒரு புளிய மரம் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள மின்கம்பம் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மண் தோண்டப்பட்டுள்ளது. இதனால் லேசான காற்று அடித்தால் புளிய மரமும் மின்கம்பமும் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலமுருகன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின் ரோடு சின்னகொல்லப்பட்டி சாந்தி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயையொட்டி மின்கம்பம் ஒன்று மிகவும் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த மின் கம்பம் அருகில் வீடுகள் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் கூட அந்த மின்கம்பம் விழுந்து விடும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குபேந்திரன், சின்னகொல்லப்பட்டி, சேலம்.
======
குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் வீடுகளில் சேரும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. எனவே நகராட்சியில் குறிப்பிட்ட சில இடங்களை நகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து குப்பைகளை கொட்டும் வகையில் குப்பை தொட்டிகள் அமைத்திட வேண்டும்.
-குமார், கிருஷ்ணகிரி.
====
தார்சாலை அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகர பஸ் நிலையத்திற்குள் தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து 20-க்கும் மேற்பட்ட நகர பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலைய நுழைவுவாயிலில் தார்சாலை அமைக்கவில்லை. இதனால்  கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. டிரைவர்கள் பஸ்களை இயக்க கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.
===
ஆபத்தான குடிநீர் தொட்டி 
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கோடாங்கிபட்டியில் இருந்து மேலமேடு செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகள் ஆனதால் அந்த குடிநீர் தொட்டியில் ஆங்காங்கே விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
-ராஜ், கோடாங்கிபட்டி, நாமக்கல்.
===
மைதானத்தில் புகுந்த குதிரைகள்  
சேலம் காந்தி மைதானத்தில் தினமும் காலை, மாலை சிறியவர் முதல் பெரியவர்கள் என ஏராளமானோர் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த மைதானத்தின் உள்ளே குதிரைகள் அங்கும் இங்குமாக சுற்றித் திரிகின்றன. இது நடை பயிற்சி செல்பவர்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே குதிரைகள் மைதானத்திற்குள் வராதபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரத், 4 ரோடு, சேலம்.
===
அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
சேலம் மாவட்டம் அரியானூர் மேம்பால சுவரில் சுவரொட்டி ஒட்டப்படுகிறது. அந்த வழியாக செல்லும் நபர்கள் அந்த சுவரொட்டியை பார்ப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மேம்பால சுவரில் சுவரொட்டி ஒட்ட கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், அரியானூர், சேலம்.

சேலம் புதிய பஸ் நிலையத்தின் அருகே பிருந்தாவன் சாலைக்கு செல்லும் அறிவிப்பு பலகை சேதமடைந்து உள்ளது. அதற்கு பதிலாக தவறாக மற்றொரு அறிவிப்பு பலகையை அங்கு வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சரியான முகவரி தெரியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பிருந்தாவன் சாலைக்கு சரியான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-அரவிந்த், பிருந்தாவன் சாலை, சேலம்.
===
நடவடிக்கை எடுப்பார்களா?
சேலம் அரசு ஆஸ்பத்திரி செல்லும் மேம்பாலம் அருகே ரெயில்வே தண்டவாலம் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் மது விற்பனை நடக்கின்றன. இது குறித்து ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அவ்வாறு மது அருந்துவதால் ரெயிலில் அடிப்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகின்றன. இதபோல் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-வினோத், குண்டுபோடும் தெரு, சேலம்.

Next Story