சிவகிரி அருகே மர்ம விலங்கு நடமாட்டம்: கேமரா பொருத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
சிவகிரி அருகே மர்ம விலங்கு நடமாட்டம் பீதியால் வனத்துறையினா் கண்காணிப்பு கேமரா பொருத்தினா்.
சிவகிரி
சிவகிரியை அடுத்த தாண்டாம்பாளையம் அருகே உள்ள செங்காளி காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 35). இவர்களுடைய மகள் யாழினி (10). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தாண்டாம்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம விலங்கு ஒன்று அனிதாவின் ஸ்கூட்டரை துரத்தியது. இதனால் பயந்து போன அனிதா தன்னுடைய ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிசென்று தப்பித்தார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள நல்லகட்டி அம்மன் கோவில் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவிலில் பலியிட்ட ஆடுகள் ரத்தத்தை குடிப்பதற்காக 2 மர்ம விலங்குகள் வந்ததாக கோவிலின் பூசாரி தண்டபாணி என்பவர் ஈரோடு வனத்துறையினரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேற்று முன்தினம் நல்லகட்டி அம்மன் கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதுடன், தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை நேற்று வனத்துறையினர் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அந்த வழியாக மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்த காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. அதேவேளையில் மயில் ஒன்று கண்காணிப்பு கேமரா இருந்த பகுதியை கடந்து சென்று உள்ளது.
இதனிடையே தாண்டாம்பாளையம் பகுதியில் இரவில் 2 குட்டிகளுடன், புலி ஒன்று செல்வது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story