தனியார் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பரபரப்பு


தனியார் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2022 6:27 AM IST (Updated: 11 May 2022 6:27 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்:

தனியார் நிதி நிறுவனம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் சுமார் 4½ ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் என நூற்றுக்கணக்கானோர் சேமிப்பு என்ற முறையில் தினமும் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவகையில் அந்த நிறுவனத்தில் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நிறுவனத்தின் சார்பில், சேமிப்பு பணத்தை வசூல் செய்வதற்காக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் இடத்திற்கு சென்று பணத்தை வசூல் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணம் வசூல் செய்வதற்கு யாரும் வராததால், இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.
மூடப்பட்டிருந்தது
இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள், நிறுவன அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்பட்டாதது தெரியவந்தது இதனால் அந்த நிறுவனத்தில் வைப்புத்தொகை மற்றும் சேமிப்பு பணம் செலுத்திய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனத்தில் சுமார் 180 பேர் பணம் செலுத்தியுள்ளனர். மேலும் பணம் கட்டிய ஒருவருக்கு முதிர்வு தொகையாக ரூ.3½ லட்சத்திற்கான காசோலை அந்த நிறுவனத்தால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் வங்கியில் அந்த காசோலையை கொடுத்தபோது, அந்த கணக்கில் பணம் இல்லை என்று தெரியவந்ததாகவும், இதனால் அவர் அந்த நிறுவனத்தை பூட்டுப்போட்டு பூட்டிவிட்டதாகவும், இதையடுத்து அந்த நிறுவனம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததாகவும், தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
15 நாட்களில்...
இந்நிலையில் அந்த நிறுவன மேலாளர் ஒருவர், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு சேர வேண்டிய பணம், 15 நாட்களில் திருப்பிக்கொடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அரியலூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க உள்ளதாக, அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் தெரிவித்தனர்.
தனியார் நிதி நிறுவனம் பூட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story