மணல் கடத்திய லாரி பறிமுதல்; தந்தை-மகன் மீது வழக்கு
மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் பெரிய ஏரிக்கு வரும் வாய்க்காலை தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அணைக்குடம் கிராம நிர்வாக அலுவலர் அனிதா, தனது உதவியாளர்களுடன் சாலையோரத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து லாரியை சோதனையிட்டபோது அதில் 3 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்த ஆவணங்களை பார்த்தபோது சீர்காழி மணல் குவாரியில் இருந்து மதுக்கூர் எடுத்துச் செல்வதற்கு அனுமதி பெற்ற மணலை, அதிக விலைக்கு விற்பதற்காக அணைக்குடம் கிராமத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அனிதா, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 45), அவரது மகன் பிரகாஷ்(22) ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story