வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோள விதைகள் வழங்க


வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோள விதைகள் வழங்க
x
தினத்தந்தி 11 May 2022 10:03 AM GMT (Updated: 2022-05-11T15:33:39+05:30)

வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோள விதைகள் வழங்க வேண்டும்

போடிப்பட்டி, மே.12-
உடுமலையில் வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோள விதைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரிய ஒட்டு ரகங்கள்
உடுமலை பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மானாவாரியில் அதிக பரப்பளவில் மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் பிஏபி பாசனப் பகுதிகளிலும் இறவைப் பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு ரகங்களே விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு தனியார் விதை நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட வீரிய ஒட்டு ரக விதைகளை சந்தைப்படுத்தியுள்ளனர். 
அத்துடன் விவசாயிகளைக் கவரும் விதமாக பல்வேறு விளம்பர யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள்.ஆனால் ஒருசில வேளைகளில் தரமற்ற விதைகளால் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
கோழித் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.இதனால் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்துக்கான தேவை உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக அளவில் மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம்
சாகுபடிக்கான விதைகளை பெரும்பாலும் தனியார் விதை நிறுவனங்களிடமே வாங்குகிறோம்.இதில் விதைக்கு மட்டுமல்லாமல் பூச்சி மருந்து, உரம் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டியதுள்ளது. இவ்வாறு தனியார் விதைகளை வாங்கி சாகுபடி மேற்கொள்ளும்போது சில வேளைகளில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.எனவே தரமான, நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகளை வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய கோ எச்.எம்.8 என்ற பெயருடைய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் நல்ல மகசூல் தருவதாக உள்ளது.ஆனாலும் தனியார் நிறுவனங்களையே அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் நாடிச் செல்வதால் வேளாண்மைத்துறையில் மக்காச்சோள விதைகள் வாங்குவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.இருந்தாலும் ஆண்டுதோறும் வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோள விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி சுமார் 390 கிலோ வீரிய ஒட்டு ரக விதைகள் தாராபுரத்திலிருந்து ஒருசில நாட்களில் வந்து சேர்ந்து விடும்.தனியார் நிறுவன விதைகளை விட தரமான விதைகளை வேளாண்மைத்துறை வழங்கினாலும் அதனை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.எனவே குறைந்த அளவிலேயே மக்காச்சோள விதைகள் வருவிக்கப்படுகிறது.தேவை அதிகமாக இருந்தால் அதிக அளவில் மக்காச்சோள விதைகளை வழங்க வேளாண்மைத்துறை தயாராகவே உள்ளது.
இவ்வாறு  அதிகாரிகள் கூறினர்.


Next Story