அடுத்த மாதம் அயோத்தி பயணம்- மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவிப்பு
அடுத்த மாதம் 10-ந் தேதி மந்திரி ஆதித்ய தாக்கரே அயோத்தி செல்வதாக அறிவித்துள்ளார்.
மும்பை,
அடுத்த மாதம் 10-ந் தேதி மந்திரி ஆதித்ய தாக்கரே அயோத்தி செல்வதாக அறிவித்துள்ளார்.
ராஜ்தாக்கரே அறிவிப்பு.
இந்துத்வா கொள்கையை பின்பற்றும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்தநிலையில் சிவசேனாவின் வாக்குகளை தட்டிப்பறிக்க மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். மேலும் அடுத்த மாதம் அயோத்தி செல்ல இருப்பதாகவும் ராஜ்தாக்கரே கூறியிருந்தார்.
இந்நிலையில் நாந்தெட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு மந்திரி ஆதித்ய தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ந் தேதி செல்கிறேன்
நான் ஜூன் 10-ந் தேதி அயோத்தி செல்கிறேன். அங்கு ராமரை தரிசனம் செய்ய உள்ளேன். நாங்கள் இப்போது மராட்டியத்தில் மேற்கொண்டு வரும் பணிகளுக்காகவும், நாட்டில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள பணிகளுக்காகவும் ஆசிர்வாதம் பெற அயோத்திக்கு செல்கிறேன்.
மராட்டியத்தில் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர ராமரை தரிசனம் செய்ய போகிறேன். மேலும், மாநிலத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஆசிர்வாதம் பெறுவேன்.
அயோத்தி நமது வலிமை மற்றும் பக்தியின் ஆதாரம். சிலர் எங்களுக்கு இந்துத்வா மற்றும் இந்து மதத்தை பற்றி பாடம் கற்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் எங்களுக்கு எந்த போதனையும் தேவையில்லை. எங்கள் இந்துத்வா எளிமையானது, அதாவது மக்களுக்கு சேவை செய்வது மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் இந்துத்வா.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story