50 ஆயிரம் பிளாஸ்டிக் குவளைகள் பறிமுதல்


50 ஆயிரம் பிளாஸ்டிக் குவளைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 5:33 PM IST (Updated: 11 May 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

50 ஆயிரம் பிளாஸ்டிக் குவளைகள் பறிமுதல்

திருப்பூர், மே.12
ஈரோட்டில் இருந்து பார்சல் சர்வீஸ் லாரியில் திருப்பூருக்கு கொண்டு வந்த தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் பிளாஸ்டிக் குவளைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு மொத்தமாக ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை 3-வது மண்டல சுகாதார அதிகாரி ராமசந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பெருமாள் கோவில் வீதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து வந்து தினசரி பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று கடைக்கு முன் நின்றது. அந்த லாரியின் பின்னால் இருந்த அட்டை பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதற்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள் இருந்தன. 4 பெரிய பெட்டிகள் முழுவதும் இந்த குவளைகள் இருந்தன.
குவளைகள் பறிமுதல்
உடனடியாக லாரியை திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட பார்சல் லாரி சர்வீஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வந்ததும் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குவளைகள் என்று தெரியாமல் ஈரோட்டில் இருந்து ஏற்றி வந்ததாக தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து பார்சல் சர்வீஸ் நிறுவனத்தினருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 4 பெரிய அட்டைப்பெட்டிகளில் இருந்த 50 ஆயிரம் பிளாஸ்டிக் குவளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். பார்சல் சர்வீஸ் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Next Story