இலங்கையில் கலவரம் எதிரொலி: தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து கப்பல் மூலம் தீவிர கண்காணிப்பு


இலங்கையில் கலவரம் எதிரொலி: தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து  கப்பல் மூலம் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 5:43 PM IST (Updated: 11 May 2022 5:43 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் நடந்து வரும் வன்முறை காரணமாக தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரோந்து கப்பல் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி:
இலங்கையில் நடந்து வரும் வன்முறை காரணமாக தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரோந்து கப்பல் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கடத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இலங்கையை சேர்ந்த அங்கடலொக்கா என்ற கடத்தல்காரன் தமிழகத்தில் நீண்டகாலம் பதுங்கி இருந்து மர்மமான முறையில் இறந்தார். இவருடன் இலங்கையை சேர்ந்த பல கடத்தல்காரர்கள் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கடலொக்காவுக்கு பிறகு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு இந்திய கடல் பகுதிக்குள் துப்பாக்கி மற்றும் போதை பொருட்களுடன் படகில் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வரத்தொடங்கினர். இதனால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
தற்போது இலங்கையில் வன்முறை நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி, அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கொலை குற்றவாளிகள், கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டவர்கள் சுமார் 50 பேர் ஜெயிலில் இருந்து தப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பயங்கரவாதிகள், அகதிகள் போன்று தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. உத்தரவின் பேரில் தமிழக கடற்கரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தீவிர சோதனை
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் மாவட்டம் முழுவதும் கடற்கரையோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மீனவ கிராமங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வந்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து கடலில் படகில் சென்றும் கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு, நல்லதண்ணி தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று தூத்துக்குடி ரோந்து கப்பலில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story