மாவட்ட செய்திகள்

315 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி + "||" + next month start in nit tec expo

315 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி

315 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி
315 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி
திருப்பூர்
திருப்பூரில் 315 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
நிட்டெக் கண்காட்சி
நிட்டெக் கண்காட்சி நிறுவன தலைவர் ராயப்பன் திருப்பூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஹைடெக் இண்டர்நேசனல் டிரேடு பேர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் நிட்டெக் பின்னலாடை எந்திர மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி திருப்பூரில் 1993ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை. இந்தநிலையில் 16-வது முறையாக திருப்பூர் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் அமைந்துள்ள ஹைடெக் திருப்பூர் கண்காட்சி மைதானத்தில் அடுத்த மாதம் ஜூன்  3ந் தேதி முதல் 6ந் தேதி வரை பின்னலாடை எந்திர மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடக்கிறது.
2 லட்சம் சதுர அடி பரப்பளவில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பார்களுடன் 315 ஸ்டால்கள் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 75 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இதுவரை 160க்கும் மேற்பட்ட எந்திர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, இத்தாலி, அமெரிக்கா எந்திரங்கள் கண்காட்சிக்கு வந்து சேர்ந்துள்ளன. இதுதவிர தைவான், தென்கொரியா, பிரான்ஸ், துருக்கி நாடுகளில் இருந்தும் எந்திரங்கள் வருகிறது.
ரூ.500 கோடி எந்திரங்கள்
தலைசிறந்த நிட்டிங் எந்திரங்கள், பிரிண்டிங் எந்திரங்கள், லே கட்டிங் எந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. உள்நாட்டு தயாரிப்பு எந்திரங்களும் கண்காட்சியில் இடம்பெறுகிறது. வங்கிக்கடன் பெறும் வகையில் வங்கிகளும் கண்காட்சியில் ஸ்டால்கள் அமைக்கிறார்கள்.
பின்னலாடை, சாயஆலை, பிரிண்டிங், டிஜிட்டல் பிரிண்டிங், காம்பாக்டிங், ரிலாக்ஸ் டிரையர், எம்ப்ராய்டரி, வாஷிங் எந்திரங்கள், தையல் ஊசி வகைகள் என ரூ.500 கோடி மதிப்புள்ள எந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கும், பின்னலாடை தொழிலுக்கு உதவியாகவும் இந்த கண்காட்சி அமையும். திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, சூரத், பெங்களூரு, கொல்கத்தா, லூதியானா, டெல்லி, மும்பை பகுதியை சேர்ந்தவர்கள் கண்காட்சியை பார்வையிட வருவார்கள்.
ரூ.1,000 கோடிக்கு வர்த்தக விசாரணை
இந்த கண்காட்சியில், ரூ.1,000 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெறும் என்றும், 50 ஆயிரம் பேர் பார்வையிட வருவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.