டயர் வெடித்து கோழிப்பண்ணைக்குள் புகுந்த தனியார் பஸ்


டயர் வெடித்து கோழிப்பண்ணைக்குள் புகுந்த தனியார் பஸ்
x

ஆண்டிப்பட்டி அருகே டயர் வெடித்து கோழிப்பண்ணைக்குள் தனியார் பஸ் புகுந்தது. இதில் 100 கோழிகள் நசுங்கி செத்தன. 20 பேர் காயம் அடைந்தனர்.

ஆண்டிப்பட்டி:

தறிகெட்டு ஓடிய பஸ்

மதுரையில் இருந்து தேனி நோக்கி நேற்று அதிகாலை 3 மணிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர். பஸ்சை, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 27) ஓட்டினார்.

மதுரை-தேனி சாலையில், ஆண்டிப்பட்டியை அடுத்த திம்மரசநாயக்கனூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியது.

100 கோழிகள் செத்தன

பஸ்சை நிறுத்த டிரைவர் பாண்டியராஜன் முயன்றார். இருப்பினும் அவரால் முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் சாலையின் எதிர்புறத்துக்கு பஸ் சென்று, அங்கிருந்த கோழிப்பண்ணைக்குள் புகுந்தது. இதில் கோழிப்பண்ணையின் மேற்கூரை சேதம் அடைந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. 

மேலும் சம்பவ இடத்திலேயே 100-க்கும் மேற்பட்ட கோழிகள் நசுங்கி செத்தன. அதிகாலை நேரம் என்பதால் கோழிப்பண்ணையில் யாரும் இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

20 பயணிகள் காயம் 

இதேபோல் அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் அசந்து தூங்கி கொண்டிருந்தனர். அங்கும், இங்குமாக தாறுமாறாக பஸ் ஓடியதை அறிந்த பயணிகள் திடுக்கிட்டு விழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பஸ் விபத்தில் சிக்கி விட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த உத்தமபாளையம் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24), குன்னூரை சேர்ந்த மகாலிங்கம் (52), வெள்ளைச்சாமி (39), சிவக்குமார் (46), சிவகங்கையை சேர்ந்த ரமேஷ் (43), டிரைவர் பாண்டியராஜன் ஆகியோர் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களுக்கு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ரமேஷ், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story