அசானி புயல் காரணமாக தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்பு
அசானி புயல் காரணமாக தூத்துக்குடியில் புதன்கிழமை கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. சூறைக்காற்றால் புகைப்போக்கி சாய்ந்தது.
தூத்துக்குடி;
அசானி புயல் காரணமாக தூத்துக்குடியில் புதன்கிழமை கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. சூறைக்காற்றால் புகைப்போக்கி சாய்ந்தது.
பலத்த காற்று
வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. அவ்வப்போது வானம் மேகமூட்டமாகவும், பலத்த காற்றும் வீசியது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று காலை முதல் பலத்த சூறைக்காற்று வீசிக் கொண்டே இருந்தது. அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சாலைகளில் செல்பவர்களின் மீது மணல் மற்றும் புழுதியையும் வாறி இறைத்தது. இதன் காரணமாக சாலையில் நடந்து, வாகனங்களின் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், விளம்பர பலகைகள், சாலை தடுப்புகள் காற்றில் சரிந்து சாலைகளில் விழுந்தன. சில பகுதிகளில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.
மின்சாரம் துண்டிப்பு
தூத்துக்குடி மையவாடி பகுதியில் உள்ள மின்சார தகன மையத்தின் புகைப்போக்கி கோபுரம் சூறைக்காற்று காரணமாக சாய்ந்து அருகில் சென்ற உயர்அழுத்த மின்சார ஒயரில் விழுந்தது. இதனால் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி நகரம் முழுவதும் 3 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதேபோன்று ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று காரணமாக மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு மின் வினியோகம் தடைபட்டது.
இதையடுத்து அந்தந்த பகுதிகளில் மின்ஒயர்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு, பாதிப்புகளை சரிசெய்தனர்.
கடல் கொந்தளிப்பு
மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடல் அலைகள் 3½ மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story