‘ஒரு நாள் சார்பதிவாளர்' மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு
போடியில் பத்திரப்பதிவு செய்ததில் அரசுக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஒரு நாள் மட்டும் சார்பதிவாளராக பணியாற்றியவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி:
பத்திரப்பதிவு
தேனி மாவட்டம் போடியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்த சார்பதிவாளர் விடுப்பில் சென்றதால், பொறுப்பு சார்பதிவாளராக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி ஒரு நாள் மட்டும் அழகுமலை என்பவர் பணிபுரிந்தார்.
அந்த ஒரு நாளில் பத்திரப்பதிவு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையால் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றிய அழகுமலை, பொறுப்பு சார்பதிவாளராக ஒரு நாள் மட்டும் பணியாற்றினார். அந்த ஒரே நாளில் தமிழ்நாடு ஊரக, நகர்புற சீரமைப்புத்துறையின் வழிகாட்டுதல், வரையறை அனுமதி பெறாத 14 இடங்களை பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த பத்திரப்பதிவுக்கு முன்பு அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்யவில்லை.
வழக்குப்பதிவு
இதுதொடர்பான ஆவணங்களையும் அவர் பார்வையிடவில்லை. போடி நகராட்சிக்கு வீட்டடிமனை ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60-ம், வளர்ச்சி கட்டணமாக ரூ.250-ம், ஆய்வுக்கான கட்டணமாக ரூ.500 என ஒவ்வொரு இடத்துக்கும் வழங்க வேண்டும்.
ஆனால், 14 இடங்களுக்கு ஒழுங்குமுறை சீரமைப்பு கட்டணம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 980, வளர்ச்சி கட்டணம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்து 750, ஆய்வுக்கட்டணம் ரூ.7 ஆயிரம், பதிவு கட்டணம் ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 904 என அரசுக்கு சேர வேண்டிய ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து 634-ஐ வசூலிக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த விசாரணை அறிக்கையையே புகாராக கொண்டு வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒருநாள் சார்பதிவாளரான அழகுமலை மீது தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகுமலை தற்போது உத்தமபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story