மாவட்ட செய்திகள்

55 ஆயிரம் தொட்டிகளில் கண்கவர் மலர்கள் + "||" + Spectacular flowers in 55 thousand pots

55 ஆயிரம் தொட்டிகளில் கண்கவர் மலர்கள்

55 ஆயிரம் தொட்டிகளில் கண்கவர் மலர்கள்
ஊட்டியில் 20-ந் தேதி மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி 55 ஆயிரம் தொட்டிகளில் கண்களை கவரும் வகையில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அங்கு கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஊட்டி

ஊட்டியில் 20-ந் தேதி மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி 55 ஆயிரம் தொட்டிகளில் கண்களை கவரும் வகையில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அங்கு கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

124-வது கண்காட்சி

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு கோடை சீசனையொட்டி 124-வது மலர் கண்காட்சி வருகிற 20-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. 

இதை முன்னிட்டு ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து 275 ரகங்களை சேர்ந்த மலர் விதைகள் பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டது. பின்னர் நடைபாதை ஓரங்கள், பாத்திகள் மற்றும் மரங்களை சுற்றிலும் 5½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இதனை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தார்கள். 

பூத்துக்குலுங்கும் மலர்கள்

ஊட்டியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், புல்வெளிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் நடவு செய்யப்பட்ட செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இது சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்தநிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்து உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், தோட்டக்கலை துறை இயக்குனர் சிப்லா மேரி, இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

புதிய ரகங்கள்

இந்த ஆண்டு ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ் மற்றும் புதிய ரகங்களான ஆர்னமென்டல்கேர், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், இன்காமேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரன்ஸ் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுன்யா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, டொரினியா உள்பட 200-க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்ட 35 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இது தவிர ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணம் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.