விபத்துகளை தடுக்க வேகத்தடை


விபத்துகளை தடுக்க வேகத்தடை
x
தினத்தந்தி 11 May 2022 2:16 PM GMT (Updated: 11 May 2022 2:16 PM GMT)

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்தார்.

கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்தார்.

சப்-கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி வருகிற 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மலர்கண்காட்சியை தமிழக முதல்-அமைச்ர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. 

 இதன் ஒரு பகுதியாக இன்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை பகுதிக்கு நேரில் சென்று, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாதி சான்று கோரி விண்ணப்பித்திருந்த சுமார் 50 பழங்குடியின பயனாளிகளின் மனுக்கள் குறித்து ஆய்வு செய்தார். 

வேகத்தடை

இதையடுத்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறியதாவது:-
தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில் அந்த சாலையில் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  

மேலும் கோடை சீசனையொட்டி முக்கிய பிரமுகர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்வதால் குஞ்சப்பனை முதல் கோத்தகிரி வரை குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story