சவுதி அரேபியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.47½ லட்சம் தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்
சவுதி அரேபியாவில் இருந்து சென்னை விமான நிலையம் கடத்தி வரப்பட்ட ரூ.47½ லட்சம் தங்க ஸ்பேனர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது ஆந்திர மாநிலம் போஜவரிபள்ளியை சேர்ந்த மகபூப் பாஷா (வயது32) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்து இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில் 6 ஸ்பேனர் கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சந்தேகம் கொண்டு அதை பரிசோதித்து பார்த்த போது, அவை தங்கத்தால் செய்யப்பட்ட நிலையில், வெள்ளை நிற மூலாம் பூசப்பட்டு கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடமிருந்து ரூ.47 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 20 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர வாலிபர் மகபூப் பாஷாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story