ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் அதிரடி கைது
திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ஆசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ஆசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வாரிசு சான்றிதழ்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள சாயமலை கிராமம் மேலச்சிவகாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இவரது தாயார் ராஜம்மாள் இறந்ததை தொடர்ந்து வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார் மைதீன் பட்டாணி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
கையும், களவுமாக பிடிபட்டார்
லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகுராஜ் இதுபற்றி தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை சூப்பிரண்டு மதியழகனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை அழகுராஜிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் தாலுகா அலுவலகத்தில் இருந்த தாசில்தார் மைதீன் பட்டாணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக மைதீன் பட்டாணியை பிடித்தனர்.
கைது
பின்னர் அலுவலக கதவை அடைத்து விட்டு, அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்திலும் சோதனை செய்தனர். விடிய, விடிய நடைபெற்ற இந்த சோதனையில் மைதீன் பட்டாணி லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்து மேல் விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story