தூத்துக்குடி, கோவில்பட்டியில் ரெயில் பயணச்சீட்டு வழங்கும் தானியங்கி எந்திரங்கள்
தூத்துக்குடி, கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிமாற்றம் மூலம் ரெயில் பயணச்சீட்டு வழங்கும் தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிமாற்றம் மூலம் ரெயில் பயணச்சீட்டு வழங்கும் தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தானியங்கி எந்திரம்
முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் பெறுவதில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் ரெயில் பயணச்சீட்டு தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிமாற்றம் மூலம் ரெயில் பயண சீட்டு வழங்குவதற்கான தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பயணச்சீட்டு
இந்த எந்திரங்களில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பண மதிப்பை செலுத்தி பயணச்சீட்டு பெறப்பட்டு வந்தது. தற்போது புதிய முயற்சியாக பணமில்லா பரிமாற்றம் மற்றும் மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க க்யூ.ஆர். கோட் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பயணச்சீட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்கள் ஆகியவை பெற்றுக்கொள்ள முடியும். ரெயில்வே சீசன் டிக்கெட்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டுகளிலும் பணப்பற்று செய்துகொள்ளலாம்.
ஸ்மார்ட் கார்டு
பயணச்சீட்டு எந்திரங்களில் பயண விவரங்களை பதிந்தவுடன், பணம் செலுத்தும் முறைகளான ஸ்மார்ட் கார்டு மற்றும் க்யூ. ஆர். கோட் பட்டியல் திரையில் தோன்றும். திரையில் கண்ட க்யூ. ஆர். கோட் தேர்வு செய்தவுடன், க்யூ ஆர் கோட் திரையில் தோன்றும்.
அதை செல்போன் செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து மின்னணு பணப் பரிமாற்றம் செய்யலாம். கட்டணத் தொகையை செலுத்தியவுடன் ரெயில் பயணச்சீட்டு வெளியே வரும். க்யூ ஆர் கோடு பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டுகளில் பணப்பற்று செய்து கொள்ளலாம்.
புகார்
மேலும் கியூ. ஆர்.கோடை பயன்படுத்தி எப்படி பயணசீட்டு பெறுவது என்பதை காட்சியாக https://www.youtube.com/watch?v=BEClkHPnQmU என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். பணமில்லா பரிமாற்றம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள அல்லது ஏதாவது குறைபாடு பற்றி புகார் செய்ய "ரெயில் மதாத்" செயலி அல்லது தொலைபேசி எண் 139 ஐ தொடர்பு கொள்ளலாம்.
நீண்ட வரிசையில் நிற்காமல் நேரத்தை மிச்சப்படுத்த தானியங்கி பயணச் சீட்டு எந்திரங்களை பயணிகள் பயன்படுத்தலாம்.
இந்த தகவல் தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story