பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு?


பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு?
x
தினத்தந்தி 11 May 2022 2:59 PM GMT (Updated: 11 May 2022 2:59 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

தேர்தல் பணிகள்

  சுப்ரீம் கோர்ட்டு மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதில் 2 வாரத்திற்குள் தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உத்தரவில் கூறியது. இந்த உத்தரவு நாடு முழுவதும் தேர்தல் நடைபெறாமல் உள்ள அனைத்து மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

  அதனால் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சி தேர்தலை நடத்த தயராக இருந்தாலும், இட ஒதுக்கீடு, வார்டுகள் மறுசீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அதற்கு தயாராக இல்லை. இந்த பணிகளை முடித்தால் மட்டுமே மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் கூறினார்.

மறு ஆய்வு மனு

  மேலும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி அரசு வக்கீல்கள் குழுவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை(வெள்ளிக்கிழமை) சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

  அதாவது பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 248 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருவதால் மாநகராட்சி தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்குமாறு கேட்கப்படும் என்று தெரிகிறது. பெங்களூரு மாநகராட்சிக்கு தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்த அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

அரசு விரும்பவில்லை

  40 சதவீத கமிஷன் புகார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, கல்லூரி உதவி பேராசிரியர் நியமன முறைகேடு, பொதுப்பணித்துறயைில் என்ஜினீயர் நியமன முறைகேடு என்று பல்வேறு முறைகேடு புகார்களை கர்நாடக பா.ஜனதா அரசு எதிர்கொண்டு வருகிறது.

  இந்த சூழ்நிலையில் மாநகராட்சி தேர்தல் தற்போதைக்கு நடத்தப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்னரே மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Next Story