ராட்டின திடலில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ராட்டின திடலில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 May 2022 3:16 PM GMT (Updated: 11 May 2022 3:16 PM GMT)

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டின திடலில், மின்விளக்கை சரிசெய்ய முயன்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்.

தேனி:


சித்திரை திருவிழா

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்று திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த திருவிழாவுக்காக, கோவில் அருகில் உள்ள திடலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக திருவிழா காலங்களில் சுமார் 15 ராட்டினங்கள் அமைக்கப்படும். 

2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடப்பதால், இந்த ஆண்டு 28 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ராட்டினங்கள் மற்றும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த மின் விளக்குகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் பாய்ந்து...

இந்த ராட்டின திடலில், தேனியை அடுத்த உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 36) என்பவர் மின் விளக்குகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு ராட்டினத்தின் அருகில் சுமார் 8 அடி உயரத்தில் பொருத்தப்பட்டு இருந்த மின்விளக்கு எரியவில்லை என்பதால், அதை சரிசெய்யும் முயற்சியில் முத்துக்குமார் ஈடுபட்டார்.

அப்போது அவர் அங்கிருந்த இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு, மின்விளக்கு பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கம்பம் அருகில் சென்றார். இரும்பு கம்பத்தில் ஏறி மின் விளக்கை சரி செய்வதற்காக கையில் எடுத்துச் சென்ற ஏணியை அந்த கம்பத்தின் மீது சாய்த்தார். 

அப்போது அந்த கம்பத்தில் மின் கசிவு இருந்துள்ளது. எதிர்பாராத விதமாக முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால், மின்கம்பத்தை சாய்த்த நிலையில் அசைவின்றி இருந்தார். சிறிது நேரத்தில் அவர் தொப்பென்று கீழே விழுந்தார்.

தொழிலாளி சாவு

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். பின்னர் அவர், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து முத்துக்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே அங்கு விரைந்து வந்தார். 

சம்பவ இடத்தை பார்வையிட்டும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த மின் விபத்து குறித்த காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி சுனிதா (31) என்ற மனைவியும், விசாலினி (10), சகானா ஸ்ரீ (7 மாதம்) என்ற மகள்களும், விஷால் பாண்டி (7) என்ற மகனும் உள்ளனர்.

 ராட்டினங்கள் நிறுத்தம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, வீரபாண்டியில் ராட்டினங்கள் அனைத்தும் நேற்று நிறுத்தப்பட்டன. மின் விபத்து ஏற்பட்ட போது ராட்டின திடலில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இந்த திருவிழாவில் மாலையில் இருந்து விடிய, விடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் ராட்டினங்கள் ஆடுவதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் குவிந்து விடுவது வழக்கம். 

அப்படிப்பட்ட சூழலில் மின்கசிவு ஏற்படும் அளவுக்கு கவனக்குறைவு இருந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராட்டின திடலில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு அதில் ஏராளமான மின் விளக்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், மின்சார வயர்களில் நேரடியாக எல்.இ.டி. டியூப் லைட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. 

பலத்த காற்று வீசி வரும் நிலையில் மின் கசிவு ஏற்படுவதற்கு இதுவும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மின் இணைப்புகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவம் வீரபாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் நிகழ்ச்சி ரத்து

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நேற்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்த கண்காட்சியை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பகல் 2 மணியளவில் மின் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் முரளிதரன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்தார்.

எதுவும் தெரியாமல் கடந்து போன மக்கள்

வீரபாண்டி ராட்டினம் திடலில் மின் விளக்கை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான  காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், தொழிலாளி முத்துக்குமார் இரும்பு ஏணியை தனி ஒருவராக எடுத்துச் சென்று மின் விளக்கு பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கம்பத்தில் சாய்த்து விட்டு அசையாமல் நிற்பதும், சிறிது நேரத்தில் கீழே விழுவதும் பதிவாகி இருந்தது. அவர் மின்சாரம் பாய்ந்து அசையாமல் நின்றபோது, அந்த வழியாக மக்கள் சிலர் எதுவும் தெரியாதது போல் கடந்து சென்றனர். அந்த காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Next Story