‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 May 2022 8:55 PM IST (Updated: 11 May 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வீணாக செல்லும் குடிநீர் 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள திருவம்பலபுரம் பஞ்சாயத்து ஆத்தங்கரை பள்ளிவாசல் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.
கோபாலகிருஷ்ணன், ஆத்தங்கரை பள்ளிவாசல்.

பழுதடைந்த அடிபம்பு 

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் தெற்கு தெருவில் உள்ள அடிபம்பு கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். மேலும், இங்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தால் பொதுமக்கள் தாகம் தீர்க்க பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மணிகண்டன், கடம்பன்குளம்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

தருவை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஏசுராஜன், அடைமிதிப்பான்குளம்.

திறந்து கிடக்கும் மின்பெட்டி 

ராதாபுரம்-நக்கனேரி சாலையில் உள்ள மகேந்திரபுரம் பஸ் நிறுத்தத்தில் மின்பெட்டி ஒன்று மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. இந்த மின்பெட்டியானது சிறு குழந்தைகளுக்கும் எட்டும் தூரத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே, திறந்து கிடக்கும் இந்த மின்பெட்டியை மூடிவைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வாகன ஓட்டிகள் அவதி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் பகுதியான அம்பை-தென்காசி மெயின் ரோடு எஸ் வளைவு போன்று ஆபத்தான வளைவு உள்ளது. அந்த வளைவு பகுதியில் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பல இடங்களில் ஆபத்தமான பள்ளங்கள் உருவாகி உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி வளைவுகளில் உள்ள ஆபத்தான பள்ளங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.

ஆபத்தான மின்கம்பம் 

கடையநல்லூர் தாலுகா புளியங்குடி 3-வது வார்டு அம்பேத்கர் 4-வது தெரு மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து வளைந்து காணப்படுகிறது. மேலும், மின்விளக்குகளும் இல்லை. மின்பெட்டியும் திறந்து கிடக்கிறது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வராஜ் சிவா, சிந்தாமணி.

சுகாதாரக்கேடு

ஆலங்குளம் தொட்டியான்குளம் புதுப்பட்டி சாைலயோரத்தில் சுடலைமாட சுவாமி கோவில் எதிரே காலாவதியான மருந்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும், அங்கு குப்பை, இறைச்சி, கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. ஆகவே, இந்த கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆறுமுகராஜ், ஆலங்குளம்.

பொது சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே சோலை குடியிருப்பு ஊராட்சி குதிைரமொழி கிராமம் வடக்கு சாலையில் மகளிர் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் உள்ள கோப்பைகள், கட்டிடங்கள் ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மூர்த்தி, உடன்குடி.

 

Next Story