200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
பேரணாம்பட்டில் வாலிபர் ஒருவர் 20 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டில் வாலிபர் ஒருவர் 20 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர்
பேரணாம்பட்டு டவுன் ரஷீதாபாத் பகுதியை சேர்ந்தவர் ரபீக் அஹம்மத். பிஸ்கெட் வியாபாரி. இவரது மகன் ஷகீல் அஹம்மத் (வயது 26). திருமணமாகாதவர். சற்று மன நலம் பாதிக்கப்பட்டு போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த சில ஆண்டுகளாக பேரணாம்பட்டு டவுன் நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 200 அடி உயரத்தில் அமைந்துள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் உச்சி பகுதிக்கு ஏறி சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டி வந்தார்.
இந்தநிலையில் வழக்கம் போல் மீண்டும் அதே செல்போன் கோபுரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கீழே இறங்கும்படி கூறியும் இறங்காமல் 200 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சி பகுதிக்கு சென்றுவிட்டார்.
தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்
பின்னர் அங்கிருந்து கீழே குதிக்க முயன்றார். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார், பேரணாம்பட்டு தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து சென்று மைக்கில் ஷகீல் அஹ்மதை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அவர் யாராவது மேலே வந்தால் கீழே குதித்து விடுவதாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் அங்கு வந்து மைக்கில் ஷகில் அஹம்மத்திடம் பேசினார். அதற்கு ஷகீல் அஹம்மத் தன்னை ஒருவர் திட்டி விட்டதாகவும், தனது தந்தை சரியாக பார்த்து கொள்ளவில்லை என கூறினார். அதற்கு நகராட்சி துணை தலைவர் உன்னை திட்டியவர்களை நான் தட்டி கேட்கிறேன் என சமாதானப்படுத்தினார்.
இதனை ஏற்று ஷகீல் அஹம்மத் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10.15 மணியளவில் கீழே இறங்கி வந்தார்.
செல்போன் கோபுரத்தில் ஏறியதில் அவருடைய கைகளில் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் கத்தியால் தானே கீறிக் கொண்டதில் காயங்கள் இருந்தன. அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story