மீஞ்சூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது


மீஞ்சூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 3:50 PM GMT (Updated: 2022-05-11T21:20:09+05:30)

மீஞ்சூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீஞ்சூர்,  

மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி என்கிற ஒத்தகை மூர்த்தி (வயது 55). ரவுடியான இவர் மீது 3 கொலை உள்பட 28 வழக்குகள் உள்ளன. இவர் வாயலூர் குப்பம் திருவெள்ளைவாயல் பகுதிகளில் அனுமதியின்றி பார் நடத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் காலையில் 5 பேர் கொண்ட கும்பல் பாரில் இருந்த மூர்த்தியை சுற்றி வளைத்து வெட்டிகொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் செங்குன்றம் மாவட்ட காவல் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக், அமீர்அலிஜின்னா மற்றும் தனிப்படை போலீசார் செங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை காசிமேடு பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (31), அத்திப்பட்டு புதுநகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (26) எண்ணூர் உலகநாதபுரம் பகுதியை சார்ந்த சுந்தர் (27), எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த கிஷோர்குமார் (22), எண்ணூரை சேர்ந்த அருண்குமார் (22) என்பது தெரியவந்தது. மோகன்ராஜ் மீது மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் மோகன்ராஜ் அளித்த வாக்குமூலத்தில்:-

மூர்த்தியை நம்பி கடந்த ஆண்டு சிலம்பரசன் கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்தேன். அதன்பின்னர் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் இழந்து இருந்து வந்ததாகவும், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பூச்சி எடுப்பவர்களிடம் பணம் பெற்று ஒத்தகை மூர்த்திக்கு கொடுப்பது போல் தனக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறியது மூர்த்திக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னை கொலை செய்ய திட்டமிட்டார். இதனை அறிந்த நான் நண்பர்களுடன் சேர்ந்து மூர்த்தியை கொலை செய்தேன்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Next Story