ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில், கோர்ட்டில் நேரடி ஆஜரிலிருந்து நிரந்தர விலக்குக்கோரி ராகுல்காந்தி மனு


ராகுல் காந்தி கோர்ட்டில் மனு
x
ராகுல் காந்தி கோர்ட்டில் மனு
தினத்தந்தி 11 May 2022 4:00 PM GMT (Updated: 11 May 2022 4:00 PM GMT)

அவதூறு வழக்கில் பிவண்டி கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு கோரி மனு தாக்கல் செய்தார்.

தானே, 
  அவதூறு வழக்கில் பிவண்டி கோர்ட்டில் ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு கோரி மனு தாக்கல் செய்தார். 
மனு தாக்கல்
  தானே பிவண்டியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக குற்றம் சாட்டினார். 
  இந்நிலையில் தானேயை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக பிவண்டி கோர்ட்டில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அவர் மனுவில் கூறியிருந்தார். 
  இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவரும் நிலையில் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி ராகுல்காந்தி பிவண்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 
அதிக பயணம்
  இது தொடர்பாக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நான் கேரளாவின் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அடிக்கடி எனது தொகுதிக்கு செல்லவேண்டி உள்ளது. அங்கு கட்சி பணிகளில் கலந்துகொள்ள வேண்டி உள்ளது. மேலும் இதற்காக நிறைய பயணம் செய்யவேண்டி உள்ளது.
  எனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும். தேவைப்படும்போது எனது சார்பில் எனது வக்கீலை ஆஜராக அனுமதிக்க வேண்டும். 
  இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். 
  இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜே.வி.பாலிவால், இந்த மனுவுக்கு புகார்தாரரான ராஜேஷ் குந்தே பதிலளிக்க உத்தரவிட்டு, வருகிற 18-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
  இந்த வழக்கு விசாரணையை 2 முறை ஒத்திவைக்க கோரிய ராஜேஷ் குந்தேவுக்கு கோர்ட்டு கடந்த மாதம் ரூ.1,500 ஆபராதம் விதித்ததுடன், அந்த பணத்தை ராகுல்காந்திக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  

Next Story