பாலக்கோடு பேரூராட்சியில் 5 ஏக்கரில் நடைபயிற்சி பூங்கா அமைக்க நடவடிக்கை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு


பாலக்கோடு பேரூராட்சியில் 5 ஏக்கரில் நடைபயிற்சி பூங்கா அமைக்க நடவடிக்கை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2022 4:16 PM GMT (Updated: 2022-05-11T21:46:27+05:30)

பாலக்கோடு பேரூராட்சியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபயிற்சி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாலக்கோடு:
பாலக்கோடு பேரூராட்சியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபயிற்சி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகரத்தை சுற்றியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நாளடைவில் வளர்ச்சி அடைந்து வரும் பாலக்கோடு பேரூராட்சியில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக நடைபயிற்சி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நேற்று பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்ட அவர் பேரூராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள அண்ணா நகருக்கு அருகில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபயிற்சி பூங்கா அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபயிற்சி பூங்கா
அப்போது அவர் கூறுகையில், பூங்கா அமைய உள்ள இடம் ரெயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால் மத்திய அரசிடம் அனுமதி கடிதம் பெற்று பேரூராட்சி நிர்வாகம் மூலம் சிறியவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் ரவி, சரவணன், குருமணி, சாதிக், வகாப்ஜான், மோகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story