6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், கடைகளில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் - விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு


6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், கடைகளில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் - விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 4:18 PM GMT (Updated: 11 May 2022 4:18 PM GMT)

6 வழிச்சாலையை எதிர்த்து இந்த மாதம் 31-ந்தேதி வீடு மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பேரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

இந்த சாலை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 700 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள், கோவில்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள முப்போகம் விளையும் நிலங்கள், நீர்நிலைகள் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க கூடாது என்று 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட நில பாதுகாப்பு மாநாடு ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள் வரவேற்றார். பொருளாளர் கே.பி. பெருமாள் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

6 வழிச்சாலை அமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை சமீபத்தில் நடத்திய பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நிலம் தர முடியாது என்று அனைத்து விவசாயிகளும் கூறிவிட்ட நிலையில் அதிகாரிகள் சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும். ஒரு பெரிய நிறுவனம் லாபம் அடைவதற்காக முப்போகம் விளையும் நிலங்கள், காடுகள், நீர்நிலைகளை அழித்து 6 வழிச்சாலை அமைப்பதற்கான தேவை என்ன ஏற்பட்டது. காடுகள் மற்றும் நீர்நிலைகளை அழிக்க நெடுஞ்சாலை துறைக்கு யார் அனுமதி தந்தது?. ஆட்சேபனைகளையும் மீறி நிலங்களை எடுக்கும் அதிகாரம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு இல்லை.

இதனை கண்டித்து வருகிற 31-ந்தேதி 6 வழிச்சாலை அமைய உள்ள மார்க்கத்தில் உள்ள வீடுகள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோபிநயினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மாவட்ட செயலாளர் கோபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் ரவி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசி நாராயணன், காக்கவாக்கம் சசிகுமார், பருத்தி மேனிகுப்பம் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story