தலைமறைவாக இருந்தவர் மதுரை கோர்ட்டில் சரண்
நகை அடகு கடை நடத்தி ரூ.1¾ கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் மதுரை சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
திண்டுக்கல்:
ரூ.1¾ கோடி மோசடி
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த வேம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (வயது 55), பாலகுரு (50), ஜெயா என்ற ஜெயச்சந்திரன் (51). இவர்கள் 3 பேரும் சேர்ந்து எரியோட்டை அடுத்த கோவிலூரில் நகை அடகு கடை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் இருந்து வைப்பு தொகையாக பணத்தை பெற்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்பட 13 பேர் ரூ.1¾ கோடியை விஜயகுமார் உள்பட 3 பேரிடம் வைப்பு தொகையாக செலுத்தினர். இந்த வைப்பு தொகை முதிர்வு தேதியை எட்டியதும் குறிப்பிட்ட சதவீதம் வட்டி சேர்த்து திருப்பி தருவதாக 3 பேரும் தெரிவித்தனர்.
ஒருவர் கைது
அதனை நம்பி காத்திருந்த சுப்ரமணி உள்பட 13 பேருக்கும் வைப்பு தொகைக்கான முதிர்வு தேதி கடந்த பின்னரும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் நகை அடகு கடை உரிமையாளர்களை சந்தித்து பணத்தை திரும்ப கேட்பதற்காக கோவிலூர் சென்றனர். அப்போது நகை அடகு கடை பூட்டப்பட்டு இருந்தது.
பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, விஜயகுமார் உள்பட 3 பேரும், வைப்பு தொகை செலுத்தியவர்களை மோசடி செய்துவிட்டு பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்ரமணி உள்பட 13 பேரும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயகுமார் கோவிலூர் பகுதியில் பதுங்கி இருப்பதும், மற்ற இருவரும் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாலகுரு, ஜெயச்சந்திரன் ஆகியோரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கோர்ட்டில் சரண்
இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தலைமறைவான 2 பேரும், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாறி, மாறி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயா என்ற ஜெயச்சந்திரன் மதுரை சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story