குடியாத்தம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


குடியாத்தம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 May 2022 4:41 PM GMT (Updated: 11 May 2022 4:41 PM GMT)

குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை அமைக்க வில்லை

குடியாத்தம்-சித்தூர் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் இருந்து பரதராமி வரை சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பகுதிகளாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது.  பெரும்பாலான பணி முடிவடைந்து விட்டது.
 
ஆனால் கல்லப்பாடி பகுதியில் இன்னும் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர். கடந்த வாரம் பரதராமி பகுதியில் ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்டர் உடனடியாக சாலையை சீரமைக்குமாறு உத்தரவிட்டார். இருப்பினும் சாலை அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக சாலையை சீரமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இருப்பினும் கல்லப்பாடி பகுதியில் சாலை சீரமைக்கப்படவில்லை.

இதனால் அந்த ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று கல்லப்பாடி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் லலிதா, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார் மற்றும் காவல்துறையினர் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக சாலையை சீரமைப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

Next Story