மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 80 சதவீதம் குறைந்தது + "||" + Exports to foreign countries fell by 80 per cent

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 80 சதவீதம் குறைந்தது

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 80 சதவீதம் குறைந்தது
பொள்ளாச்சி தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கமடைந்தன. வெளிநாடுகளுக்கு 80 சதவீத ஏற்றுமதி குறைந்து உள்ளது.
பொள்ளாச்சி

விலை வீழ்ச்சி

பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி விவசாயிகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.  கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் தேங்காய் உற்பத்தி அதிகரித்தது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி இல்லாததால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து வாரந்தோறும் 30 கன்டெய்னர்களில் 900 டன் தேங்காய்கள் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

அங்கிருந்து துபாய்க்கு கப்பல் மூலம் ஏற்றுமதி ஆகிறது. லாரிகளில் மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதி குறைந்தது

 இந்தநிலையில் கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி 80 சதவீதம் வரை குறைந்து விட்டது. ஒரு கன்டெய்னரில் 30 டன் தேங்காய் ஏற்றி செல்ல ரூ.72 ஆயிரம் வாடகை இருந்தது. தற்போது வாடகை ரூ.3 லட்சமாக உயர்ந்து உள்ளது. வாரத்தில் 40 முதல் 50 கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது.

 தற்போது 5 கன்டெய்னர்களில் மட்டும் ஏற்றுமதி ஆகிறது. மேலும் வெளிமாநிலங்களுக்கு மாங்காய் ஏற்றுமதி அதிகரித்ததால், தேங்காய்க்கு மவுசு குறைந்து விட்டது. இதனால் வெளிமாநிலங்களுக்கு தமிழகத்தில் 100 லாரிகளில் சென்ற தேங்காய், தற்போது 10 லாரிகளில் தான் செல்கிறது.

 விலை வீழ்ச்சி காரணமாக பச்சை தேங்காய் ஒரு கிலோ தேங்காய் ரூ.23-க்கும், கருப்பு தேங்காய் கிலோவுக்கு ரூ.25 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 

தேங்காய்கள் தேக்கம்

விலை வீழ்ச்சி காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் சுமார் 3 கோடி தேங்காய்கள் தேக்கமடைந்து உள்ளன. ஒரு தேங்காய் ரூ.9-க்கு விற்பனை ஆகிறது. தேங்காய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

விவசாயிகள் கூறும்போது, தேங்காய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், கொப்பரை தேங்காய்க்கு நிரந்தர விலையை நிர்ணயம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.