மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை + "||" + Auto driver commits suicide by drinking poison

விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

விஷம் குடித்து ஆட்டோ டிரைவர்  தற்கொலை
குத்தாலம் அருகே விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2 மகன்கள். இவர்களில் ஆட்டோ ஓட்டி வரும் ஜெயசீலன், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். 
மூத்த மகன் ஜெயவசந்தனுக்கும், அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் மணிகண்டன் கடையில் கள்ள நோட்டுகள்  வைத்து விட்டு சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஜெயசீலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயசீலன் வீட்டுக்கு குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி சென்றுள்ளார். 
அப்போது ஜெயசீலன் வீட்டில் இல்லை. அங்கிருந்த அர்ஜுனனிடம் உனது மகன் ஜெயசீலன் எங்கே? என்று கேட்டு ஏதோ சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அர்ஜுனன் நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தனது மகன்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக அர்ஜுனன் வீடியோவில் பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அர்ஜுனன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அர்ஜுனன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். அப்போது  அவரது உடலை வாங்க மறுத்த அர்ஜுனனின் உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி திட்டியதால்தான் அர்ஜுனன் தற்கொலை செய்து கொண்டார். 
எனவே அர்ஜுனன் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவலின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ் (மயிலாடுதுறை), லாமேக்(சீர்காழி) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அர்ஜுனன் தற்கொலை குறித்தும், ஜெயசீலன், ஜெயவசந்தன் மீதான வழக்குகள் குறித்தும் மற்றொரு இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்துவார். அவரது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டு அர்ஜுனன் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச்சென்றனர். 
இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.